“நாங்கள் கோட்டை விட்ட இடம் இன்ஸ்டாகிராம் தான்” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இரண்டே ஆண்டுகளில் தமிழத்தின் அரசியல் திசையை தன்வசப்படுத்தியுள்ளது விஜய்யின் தவெக. ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம், ‘பஞ்ச்’ உடன் கூடிய பேச்சு நடை அறிக்கைகள் என தனது உத்திகளை அதிரடியாக மாற்றி, தவெகவை எதிர்கொள்ள புதிய டிஜிட்டல் பாய்ச்சலை தொடங்கியுள்ளது திமுக.
தேர்தல் களம் கொடுத்த பலத்த அடிக்குப் பிறகு, 70 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட அறிவாலயம் இப்போது ‘திராவிட மாடல் 2.0’ கனவை கலைத்துவிட்டு ‘டிஜிட்டல்’ அவதாரத்துக்கு தயாராகி வருகிறது. இது, இனி வரும் காலங்களில் ஆளும் தவெகவுக்கு ‘டஃப்’ கொடுக்க கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி, 34.92 விழுக்காடு வாக்குகளுடன் அரசியல் களத்தில் சாதனை படைத்துள்ளது. மறுபுறம், 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, வெறும் 59 இடங்களை மட்டுமே வென்று, 74 இடங்களை இழந்து பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.
ஆயுதம் ஆன டிஜிட்டல் களம்:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய நாள் முதலே டிஜிட்டல் களத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. மாநாட்டு அறிவிப்பு முதல் கொள்கைப் பாடல் வரை, ஒவ்வொரு நகர்வும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், எக்ஸ் ட்ரெண்டிங் என இளைஞர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது.
முதல் மாநாட்டிலேயே லட்சக்கணக்கானோர் லைவ் பார்த்ததும், #TVK என்கிற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட் ஆனதும் திமுகவுக்கு ‘அலர்ட்’ செய்தியைச் சொல்லியது. விஜய் குறைவான இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்திருந்தாலும், தனது பஞ்ச் வசனங்களாலும் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் முழங்கியது எடுபட்டது.
பாரம்பரியக் களப்பணி மற்றும் வலுவான கட்சிக் கட்டமைப்பு போன்ற திமுகவின் வழக்கமான சாதக அம்சங்கள் எதுவும் இந்தத் தேர்தலில் போதிய பலன் அளிக்கவில்லை. மாறாக, 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களைச் சென்றடைய மீம்ஸ்கள், வீடியோ எடிட்கள், ட்ரெண்டிங் ஆடியோக்கள் போன்ற நவீன டிஜிட்டல் ஆயுதங்களையே தவெக கையில் எடுத்தது. இந்த டிஜிட்டல் ஆட்டத்தில் தவெக பல அடிகள் முன்னேறி நின்றது.
திமுக தோல்வி குறித்து பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தேர்தலில் நடந்திருப்பது ஒரு புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது; பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழக நலன்களைப் பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. நானே இந்தத் தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், “சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, சிறுபிள்ளைகள் மூலமாக அவர்களின் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ய வைத்து, ஆட்சிக்கு வந்துள்ளனர். இது நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது” என்றும் அவர் ஓபனாகப் பேசினார்.
உத்திகளை மாற்றும் திமுக:
தவெக தந்த அரசியல் அழுத்தத்தின் எதிரொலியாகவே திமுக தற்போது தனது டிஜிட்டல் உத்திகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கூடவே, தொண்டர்கள் தங்களது கருத்துகளை தங்கள் குரலிலேயே பதிவு செய்ய ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற பிரத்யேக இணையதளத்தையும் தொடங்கி இருக்கிறார்.
மேலும், “திமுக இன்னும் எப்படியெல்லாம் உழைக்கவேண்டும். இணையதளம் மூலமாகத் தொண்டர்களும், பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறேன்.
அந்த மாற்றம்தான், நம் கட்சியை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கப் போகிறது” என திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் மேம்பாடு, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் பற்றி அந்த வெப்சைட்டில் கேட்கப்பட்டுள்ளன.
திமுகவின் இந்த டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி என்பது தவெக உருவாக்கிய அழுத்தத்தால் மட்டுமே நடக்கவில்லை. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்த திமுகவுக்கு, அந்த மாற்றத்துக்கான அவசரத்தையும் வேகத்தையும் தவெகவின் டிஜிட்டல் சுனாமி தற்பொழுது கொடுத்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.