Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகத்தில் ஜூன் 12 வரை எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு?

சென்னை: தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர் உள்பட 8 மாவட்டங்களில் ஜூன் 11-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 10) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (ஜூன் 9) திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 11-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 12-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 10-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் (ஜூன் 9, 10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 பாரன்ஹீட் டிகிரியை ஒட்டி இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதி, கேரள - கர்நாடக கடலோரப்பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் ஜூன் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி நாட்கள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.