Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வருவாய் குறைந்த டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடலா?

சென்னை: ‘வருவாய் குறைந்த மற்றும் பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தவெக அரசு மூடி வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்பட்டதாகக் கூறப்படும் டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றும் விதமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அசல் பட்டியலைத் தவிர்த்து, வருவாய் குறைந்த மற்றும் பார் வசதி இல்லாத கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தவெக அரசு மூடி வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"மாற்று சக்தி" என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின்பும், தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு (MRP-க்கு மேல்) மது விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள கடைகளை முழுமையாக மூடாமல் அதே பகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்வதாகவும், பார் வசதி இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடுவதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது நிச்சயமாக மக்களை ஏமாற்றி விளம்பரம் தேடும் சதியே ஆகும்.

பிரச்சாரக் கூட்டங்களில் "வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது" என்று முழங்குவது எளிது; ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. எனவே, மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகளின் முழு விவரங்கள் மற்றும் இருப்பிடங்கள் அடங்கிய விவரங்களை, ஏற்கனவே நாம் கோரியதைப் போல் ஒரு வெள்ளை அறிக்கையாக முதல்வர் விஜய் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.